×

பகல் பத்து ஆரம்பம்

13.12.2023

ஏன் பகல் பத்து உற்சவம் என்று அழைக்கிறார்கள்?

திருவரங்கத்தில் அப்பொழுது மார்கழி மாத உற்சவ காலம் வந்தது. நாதமுனிகள் யோசித்தார். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு இத்தனை ஏற்றத்தை திருமங்கையாழ்வார் செய்தாரே.. அந்த திருமங்கையாழ்வார் ஈரத் தமிழில் பாடிய பிரபந்தங்களையும், மற்ற ஆழ்வார் பிரபந்தங்களையும் இணைத்து இவ்விழாவை விரிவாக்கினால் என்ன என்று நினைத்தார்.

திருவாய் மொழியைத் தவிர, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களும், பத்து நாட்கள் பாட வேண்டும் என்று, ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்களைச் சேர்த்தார். மற்ற ஆழ்வார்களின் பாடல்களை பிற்பகலில் பாடுவதால், இத்திருநாட்கள் “பகல் பத்து உற்சவம்” என்று அழைக்கிறார்கள். நிறைவாக இயற்பாவையும் சேர்த்தார்.

இயலும், இசையும், அபிநயமுமாக 21 நாட்கள் இந்தத் திருநாள், திருமொழி திருநாள், திருவாய்மொழி திருநாள் என்ற பெயரோடு மாறியது. 21 நாட்கள் முத்தமிழ் விழாவாகவே நாதமுனிகள் வடிவமைத்தார்.

முதன்முதலில் மாற்றியவர் திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் காலத்தில், வேதங்களையும் ஸ்தோத்திரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கையாழ்வார் தான் இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றியவர். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாளில் அவதாரம் செய்தவர், திருமங்கையாழ்வார்.

வைணவ ஆழ்வார்கள் பரம்பரை நம்மாழ்வாரிடம் தொடங்கி, திருமங்கையாழ்வாரிடம் முடியும். நம்மாழ்வாரை “பராங்குசன்” என்றும், திருமங்கை ஆழ்வாரை “பரகாலன்” என்றும் சொல்வார்கள். வைணவ பரம்பரையைச் சொல்லுகின்ற பொழுது ‘‘பராங்குச பரகால’’ எதிவராதிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

தலையாய வழியைக் காட்டும் மார்கழி மாதம்

மார்கழி மாதம், பரம பவித்ரமான மாதம். மார்கழி மாதத்தை “மார்க்க சீர்ஷ மாதம்’’ என்று சொல்வார்கள். `சீர்ஷம்’ என்றால் தலை. `மார்க்கம்’ என்றால் வழி. இறைவனை அடையக் கூடிய வழிகளில் தலையாய வழியைக் காட்டும் மாதம் மார்கழி மாதம். தேவர்களுக்கு விடிகாலை நேரம், அதாவது காலை 4 முதல் 6 மணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது. மார்கழி மாதம் முழுவதும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக அமைந்திருக்கிறது.

இந்த மார்கழி மாதத்தில் தனிப்பட்ட குடும்ப சுபகாரியங்களான திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதில்லை. மார்கழியில் செய்த பூஜையின் பலன், தை மாதத்தில் கிடைக்கும் என்பதால் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ராமானுஜர் செய்த மாற்றம்

ராமானுஜர் காலத்தில், இப்பெருவிழாவில் பல மாற்றங்கள் நடந்தன. ராமானுஜர் காலத்தில் `திருவரங்கத்து அமுதனார்’ என்கின்ற ஆசாரியர் பிரபன்ன காயத்ரி என்று சொல்லப்படுகின்ற, 108 கட்டளைக் கலித்துறை பாசுரங்களால் ஆன அந்தாதி நூலை இயற்றினார். அந்த நூலுக்கு, `ராமானுஜ நூற்றந்தாதி’ என்று பெயர்.

அதில், ஆழ்வார்களின் பெருமையும், ராமானுஜரின் பெருமையும், வைணவத் தத்துவங்களும் பொதிந்திருக்கும். அரங்கனின் திருவுள்ளப்படி, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் நிறைவு நாளில், இயற்பா சேவிக்கும் நாளில், ராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்ந்து சேவிக்கும் வழக்கம் ராமானுஜர் காலத்தில் வந்தது.

அதுமட்டுமின்றி, எல்லா ஆழ்வார்களின் திருவுருவங்களும் உருவாக்கப்பட்டன. இனி வருடாவருடம் நம்மாழ்வார் விக்கிரகத்தை திருநகரியில் இருந்து எழுந்தருளச் செய்வது சிரமம் எனக் கருதி, எல்லா ஆழ்வார்களையும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். இது உடையவர் செய்த ஏற்பாடு.

அத்யயன உற்சவம் என்றால் என்ன?

மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை, பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். மார்கழி மாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி, 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று `ஸ்ரீபாஞ்ச ராத்திரம்’, `ஸ்ரீபிரஸன்ன ஸம்ஹிதையில்’ விதிக்கப்பட்டுள்ளது. பிரதமை முதல் தசமி முடிய பத்து நாள் ஆகும். வேதங்களையும், ஸ்தோத்திரங்களையும் பாடி உற்சவம் செய்ய வேண்டும். அந்த பத்துநாள் உற்சவத்திற்கு “அத்யயன உற்சவம்” என்று பெயர். அத்யயனம் என்றால் `வேதங்களை பாராயணம் செய்தல்’ என்று பொருள்.

ஏகாதசி பிறந்த கதை

முரன் என்னும் அசுரன், தன்னுடைய வரபலத்தால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் தொல்லை அளித்து வந்தான். அவனை அழித்து தங்களை காக்குமாறு தேவர்கள் ஈசனை துதித்தனர்.

“நீங்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தால், உங்கள் துன்பம் தீரும்” என்று கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனோடு பெரும் போர் புரியத் தொடங்கினார். ஒன்றா.. இரண்டா… ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக நீடித்தது போர்.

ஒரு கட்டத்தில் மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து, சற்று ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்குச் சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானைத் கொல்லத் துணிந்தபோது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி, ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில், அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது. பகவான் நாராயணனிடமிருந்து, பதினோராம் நாள் தோன்றிய அந்த சக்திக்கு “ஏகாதசி” என பகவான் பெயரிட்டார்.

இந்த நாளில் விரதம் இருந்து போற்றுவோருக்கு, சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து, தன்னுள் அந்தந்த சக்தியை ஏற்றுக் கொண்டார். எனவே, ஏகாதசி என்பது பகவானின் சக்தியே. அன்று விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற விரதம் கடைபிடிக்க வேண்டும்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post பகல் பத்து ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Bagal Batu Utsavam ,Thiruvaranga ,Margazhi month ,
× RELATED ஜகத்தைக் காக்கும் புரி ஜகந்நாதர்